கோவில்களில் சமஸ்கிருதத்தை தவிர்த்து தமிழில் பூசை நடத்தப்பட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் தமிழ்ச்சொல் கொண்டு தமிழையே தெய்வமாக வணங்கிப் போற்றும் மந்திரமாக ஒரு பாட்டு வெளிவந்தமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த அற்புத படைப்பு பிரித்தானிய தமிழ் இளைஞர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஈழத்துப் பாவலர் என்று அறியப்பட்ட தவ சஜிதரன் எழுதிய தமிழ்த்தாய் அந்தாதியின் இரண்டு பாடல்கள் இசையமைக்கப்பட்டு வலையொளியில்(YouTube) வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் பிரபல திரைப்பட மேடைக் கலைஞரான மறைந்த (மரிக்கார்) ராமதாஸ் அவர்களின் மகன் சதீஷ் ராம்தாஸ் இசையமைத்த இந்தப் படைப்பினை, உலகப்புகழ் பெற்ற அறிவிப்பாளர் BH அப்துல் ஹமீட் கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய ‘சஹானா’ குறுந்திரைத் தொடரின் நாயகி காவ்யா சத்யதாஸ் அவர்கள் தமிழ்த்தாய் அந்தாதிக் காணொளிப் பாடலில் தோன்றி அபிநயம் தந்திருக்கிறார்.

இசையும் தமிழும் நாட்டிய அபநயங்களும் காட்சி அமைப்பும் மயிர்க்கூச்செறியச் செய்யும் விதமாக உள்ளதாகப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

‘நமது மண்ணின் பெருமைக்குரிய கவிஞர்’ என்று பாவலர் தவ சஜிதரனைக் குறிப்பிட்டிருந்த அப்துல் ஹமீட், சதீஷ் ராம்தாசின் இசை தமிழோடு கைக்கோர்க்கும் விதம் கண்டு நெஞ்சம் பெருமையில் நிமிர்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

விருது வென்ற கலைஞர் திலோஜன் அவர்கள் படத்தொகுப்பையும் வடிவமைப்பையும் செய்திருக்கிறார்.

மேலும், தமிழ்த்தாய் அந்தாதியின் ஏனைய பாடல்கள் crowd funding முறையில் மக்கள் பங்களிப்போடு இசைக் காணொளிகளாக உருவாக்கப்பட உள்ளதாக ‘மொழியகம்’ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.