புதிய சட்டங்களை உள்ளடக்கிய வர்த்தமானியில் அமைச்சர் கைச்சாத்து!

0

புதிய தனிமைப்படுத்தல் சட்டங்களை உள்ளடக்கிய வர்த்தமானியில் இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி நேற்று(15.10.2020) கைச்சாத்திட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானியானது மக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பாதுகாப்பு முறைமைகளை உள்ளடக்கியுள்ளது.

அதுமட்டுமன்றி சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சுமார் 10,000 ரூபாவை விட அதிகரிக்காத அபராதம் விதிப்பது, 6 மாத சிறைத்தண்டனை என்பவற்றில் ஒரு தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் நீதிமன்றத்தினால் வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தக நிலையங்களிலும் சேவை நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் பற்றியும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதாவது, சேவை நிலையங்களுக்குள்/ வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் போது அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்,

இருவருக்கு இடையில் 1 மீற்றருக்கும் குறையாத சமூக இடைவௌி பேணப்படவேண்டும்,

சேவை நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் முன்னர் ஊழியர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட வேண்டும்

சேவை நிலையங்களுக்குள் பிரவேசிப்போரின் தகவல்கள் அடங்கிய பதிவேடு முறையாக பேணப்படவேண்டும் போன்ற விடயங்கள் இந்த வர்த்தமானியில் முக்கியமாக அறிவிக்கப்பட்டுள்ளன.