ரிஷாட்டை கைது செய்யாமையால் விசனமடைந்த சட்டமா அதிபர்?

0

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ரிஷாட்டை கைதுசெய்யுமாறு சட்ட மாஅதிபர், காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரிஷாத் பதியுதீனை இதுவரையில் காவல்துறை கைதுசெய்யவில்லை.

சட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் காவல்துறையினர் செயற்படக்கூடாதென சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளையும், சட்ட மாஅதிபர் வழங்கும் அறிவுறுத்தல்களையும் காவல்துறையினர் ஏளனமாக கருதி விடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரிஷாட் கைதுசெய்யப்படாமை தொடர்பில் சட்ட மாஅதிபர், குற்ற விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் பிரசாத் ரணசிங்கவிற்கு மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதுமட்டுமன்றி பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் காவல்துறையினர் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தை மீறிச் செயற்படும் முன்னாள் அமைச்சருக்கும், அவருக்கு உதவுவோருக்கும் எதிராக சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சட்ட மாஅதிபர், காவல்துறையினருக்கு கடுமையான தொனியில் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் தலைமறைவான நிலையில் உள்ளதாகவும்,

நேற்று முன்தினம் மாலை 6.00 மணியாகும்போது 48 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் அவரைக் கைதுசெய்யமுடியவில்லையென காவல்துறை தலைமையகத்தின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.