வவுனியா இரட்டைப்படுகொலை. ஒருவர் கைது!

0

வவுனியா, ஓமந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் பாரிய வெட்டுக்காயங்களுடன் இரண்டு சடலங்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை காவல்துறையினர் இன்று(17.10.2020) காலை குறித்த இரண்டு சடலங்களையும் மீட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நிலையும் கவலைக்கிடமாக இருக்கின்றது.

குறித்த சம்பவத்தில் மாணிக்கர்வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரான கோபால் குகதாசன் (வயது 40) மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவன் மகேந்திரன் (வயது 34) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர் சுப்பிரமணியம் சிவாகரன் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.