குற்றப்புலனாய்விற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டார்!

0

இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் A.R.D.J.D.அல்விஸ், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

அதேவேளை பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் D.G.N.W.D. தல்துவ, குற்றத்தடுப்பு பிரிவிற்கான பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் R.A.D. குமாரி, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளதுடன்,

உதவி காவ‌ல்துறை அத்தியட்சகர் H.K.R.பெர்னாண்டோ விசேட அதிரடிப்படையிலிருந்து அரச புலனாய்வு பிரிவுற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய பதில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் K.G.A.K.பியசேகர, சுற்றுலாப்பிரிவின் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, பிரதி காவல்துறை மா அதிபர் M.N. சிசிர குமார, கொழும்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் 8 பேருக்கும் உதவி காவ‌ல்துறை அத்தியட்சகர்கள் நால்வருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில், இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன்,

மேலும் 18 காவல்துறை இன்ஸ்பெக்டர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.