வவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (16.10.2020) இரவு 10.00 மணியளவில் செட்டிகுளம், கிறிஸ்தவ குளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது யாதெனில்,

செட்டிகுளம், கிறிஸ்தவ குளம் பகுதியில் காணி துப்பரவு பணிக்காக சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்த 05 இளைஞர்கள் மீது அங்கு வந்த மர்ம குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

துப்பாக்கிகளை காட்டி வாள், கோடாரி மற்றும் இரும்பு கம்பிகள் மூலம் தாக்கியதுடன், தம்மிடம் இருந்த பணம், நகை, தொலைபேசிகளை அந்த குழு பறித்து சென்றுள்ளதாக காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவத்தில் காயமடைந்த 5 இளைஞர்களும் நேற்றிரவு செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் வவுனியா வைத்தியசாலை காவல்துறையினர் முறைப்பாட்டை பெற்றுக் கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.