நான் விரும்பும் தொழில்!

0

உலகில் பல தொழில்கள் உள்ளன. அவற்றுள் மனிதனை அறிவுள்ளவனாக ஆக்கும் தொழில் ஆசிரியத் தொழிலாகும். அத்தொழிலே நான் விரும்பும் தொழில். ஒரு சிறந்த ஆசிரியன் தெய்வத்திற்குச் சமனாக மதிக்கப்படுகிறான். குருவைத் தெய்வமாக மதிக்கும் பண்பு நமது சமுதாயத்திற்கு உண்டு. “எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்ற கூற்றும் இதனையே உணர்த்துகிறது.

ஆசிரியத் தொழில் மன நிறைவைத்தரும் தொழிலாகும். கல்விச் செல்வத்தை மற்றவர்க்கு இல்லையென்னாது அள்ளிக் கொடுக்க இத்தொழில் நமக்குத் துணை செய்கிறது. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் ஏதுமின்றி அனைவருக்கும் உதவக் கூடிய தொழில் ஆசிரியத்தொழில். அதனாலேயே இத்தொழிலை நான் பெரிதும் விரும்புகிறேன்.

அன்னை தரும் அன்னம் உண்டபோதிலும் மீண்டும் பசி எடுக்கிறது. அப்பா தரும் பொருட்செல்வமும் நாளடைவில் அழிந்து போகிறது. ஆனால் ஆசிரியர் தரும் அறிவுச் செல்வம் என்றுமே அழியாது நம்மைத் தொடர்கிறது. இத்தகைய புனிதமான தொழிலுக்கு நிகரான தொழில் வேறெதுவுமே இல்லை எனலாம்.

ஆசிரியத் தொழிலின் மூலம் என் அறிவை மேன்மேலும் வளர்த்திட வாய்ப்புண்டு. சிறந்த பண்பையும் பழக்க வழக்கங்களையும் நான் கைக்கொள்ளமுடியும்.
இத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு அரசு தற்போது அதிக சம்பளம் வழங்குகிறது. விடுமுறை நாட்களும் அதிகம் கிடைக்கிறது. இவ்விடுமுறை நாட்களை நல்லமுறையில் பயன்படுத்திக் கல்வித்துறையில் நான் மேன் மேலும் முன்னேற முடியுமென நம்புகிறேன். அறிவுக்கு அளவில்லை. வயதுக் கட்டுப்பாடும் இல்லை. எனவே வாழ்நாள் முழுதும் அறிவைத் தேடிட நான் விரும்புகின்றேன். அதற்கு ஆசிரியத்தொழில் எனக்கு பெரிதும் உதவுமெனக் கருதுகின்றேன்.

நான் கற்றவற்றைப் பிறர்க்கு வழங்கிட ஆசிரியத் தொழில் பயன்படும். இதன் மூலம் சமுதாயத்திற்கு என்னாலான பணிகளைச் செய்திட முடியும்.மிகச்சிறந்த தொழிலாகக் கருதப்படும் ஆசிரியத்தொழிலை மேற்கொண்டு என்னாலான பணிகளைச் செய்வதற்குப் பெரிதும் விரும்புகிறேன்.

0 Reviews