அரசியலமைப்புப் பணி இந்த ஆண்டில் இல்லை ஜனாதிபதி தெரிவிப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி மூன்று மாதங்களுக்கு பின்னரே புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார். இது அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என்றும் குறிப்பிட்டார்.
அவரது உரையில் அவர் மேலும் வலியுறுத்தியதாவது: “இந்நாட்டில் இதுவரை இயற்றப்பட்ட அரசியலமைப்புகள் மக்களின் அனுமதி பெறாமல் நடைமுறைக்கு வந்தன. சோல்பரி அரசமைப்பு, 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள் அனைத்தும் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. மக்களுக்குரிய அடிப்படைச் சட்டங்களே அரசியலமைப்பாகும், எனவே புதிய அரசியலமைப்பு மக்களிடமிருந்து அனுமதி பெறப்பட்டு, அவர்களது ஜனநாயக உரிமையாக அமையும்.”
அவர் மேலும் கூறியது: புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட யோசனைகள், கோத்தாபய அரசின் அரசமைப்பு குழுவின் பரிந்துரைகள், மற்றுமொரு புதிய யோசனைகள் அடங்கிய கருத்துக்களும் ஆராயப்படுவதாகவும், இவற்றின் அடிப்படையில் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வழிமுறைகள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதற்கான திட்டப்படி, புதிய நாடாளுமன்றத்தின் முதல் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அரசியலமைப்புக்கு குறைந்த கவனம் செலுத்தப்பட்டு, அதற்கு மாறாக பொருளாதாரக் கடமைகளில் கூடுதல் மும்முரம் காணப்படும் என்றும், அதன் பின்னரே அரசியலமைப்புச் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.