உரிய அனுமதி இன்றி மருந்து இறக்குமதி செய்யும் முயற்சிக்கு ஔடதங்கள் தயாரிப்பாளர்கள் சபை எதிர்ப்பு
(LBC Tamil)அதிகளவிலான மருந்து வகைகளை இந்தியாவை சேர்ந்த இரண்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யும் சரச்சைக்குரிய நடவடிக்கை தொடர்பில் தௌிவுபடுத்த வேண்டும் என இலங்கை ஔடதங்கள் தயாரிப்பாளர்கள் சபை தெரிவித்துள்ளது.
தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு இலங்கை ஔடதங்கள் தயாரிப்பாளர்கள் சபை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிதாக கொள்வனவு செய்யப்படவுள்ள மருந்து வகைகள் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாதவை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டிய மருந்து வகைகள் என்னவென்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கே உள்ளது.
இந்த மருந்து வகைகளை தயாரிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் இந்தியாவிற்கு சென்று உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக இலங்கை ஔடதங்கள் தயாரிப்பாளர்கள் சபை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகையை செயற்பாடுகள் அபாயகரமான முன்னுதாரணத்தை வழங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டின் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு அமைவானதா எனவும் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஊடகங்கள் இது தொடர்பில் வௌியிட்டுள்ள தகவல்கள் தொடர்பில் தௌிவுபடுத்தல் ஒன்று அவசியம் என இலங்கை ஔடதங்கள் தயாரிப்பாளர்கள் சபை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் பிரதம நிறைவேற்றுஅதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
அந்த அறிக்கைகள் உண்மையாக இருப்பின், அதற்கு தமது அமைப்பு எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் அநேகமான பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது .
மருந்து வகைகளை தனியார் மருந்தகங்களில் இருந்து கொள்வனவு செய்யுமாறு வைத்தியசாலைகளில் அறிவிக்கப்பட்டாலும் மருந்தகங்களில் அவற்றை கொள்வனவு செய்ய முடியவில்லை என நோயாளர்கள் கூறுகின்றனர்.
இருதய நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கான மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு தேவையான மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைத்த 120 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 16 மில்லியன் டொலர்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார ஸ்திரநிலையை ஏற்படுத்துவதற்கான தேசிய சபை உப குழுவில் தெரிய வந்தது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு வழங்கப்பட்ட 40 மில்லியன் டொலரை பயன்படுத்தி அவர்கள் மருந்து வகைகளை இறக்குமதி செய்தாலும், சுகாதார அமைச்சு முழுமையாக அந்த பணத்தை பயன்படுத்தவில்லை என உப குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.