உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது
(LBC Tamil) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை மறுதினம் (09) நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பிலான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 11 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அனைத்து கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தல் ,ஏனைய ஆவணங்கள் மற்றும் தேர்தல் தொடர்பிலான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக கட்சியின் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
11 ஆம் திகதி காலை10 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
தற்போதைய சூழலில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக வார இறுதி பத்திரிகைகள் செய்தி வௌியிட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட ஊடகங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடிய போது இதனை குறிப்பிட்டதாக பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் விடயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், தான் அதில் பங்கேற்க போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததாக பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிங்கப்பூரின் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடக சட்டமூலத்தை தற்போது ஆராய்ந்து மதிப்பிட்டு வருவதாகவும் அதனை போன்றதொரு சட்டத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.