உள்ளூராட்சி மன்ற தேர்தல்: 10 சுயேட்சைக் குழுக்களும் 04 அரசியல் கட்சிகளும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன
(LBC Tamil)
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் 03 இடையீட்டு மனுக்கள் நேற்று(09) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்னல் W.M.R.விஜேசுந்தர உயர்நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த எழுத்தாணை மனு மீதான விசாரணைக்கு அனுமதி வழங்காது, அதனை தள்ளுபடி செய்யுமாறு கோரி சட்டத்தரணி சுனில் வட்டகல, போராட்டக்கள செயற்பாட்டாளரான சோசலிச இளையோர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர, கலாநிதி விஷாகேச சந்திரசேகரன் ஆகியோரால் இந்த இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக
தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதுடன் அதற்கான வேட்பு மனுக்களும் கோரப்பட்டுள்ள நிலையில், அதனை இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுப்பது, நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என குறித்த இடையீட்டு மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.