கைது செய்யப்பட்ட திருக்குமார் நடேசன்! பிணையில் விடுதலை!
பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமார் நடேசன் நேற்று (17) மாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அவரை ரூபா 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் ரூபா 20 இலட்சம் பெறுமதியான இரு சரீர பிணைகளிலும் செல்ல பூகொடை நீதிமன்ற நீதவான் ருவன் பத்திரன அனுமதி வழங்கினார்.
மள்வான உடமாபிடிகம பிரதேசத்திலுள்ள ரூ. 640 இலட்சம் பெறுமதியான 17 ஏக்கர் காணி மற்றும் ரூ. 1200 இலட்சம் பெறுமதியான சொகுசு வீடு என்பவற்றை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பான விசாரணையை அடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.
இக்காணியையும் சொகுசு வீட்டையும் பகிரங்க ஏல விற்பனையில் விற்பனை செய்யுமாறு கடந்த 14ந் திகதி பூகொடை நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பூகொடை நீதிமன்றத்தில் திருகுமார் நடேசனை பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் பீ. கே. சேரசிங்க, ஆஜர் செய்தார்.
கைது செய்யப்பட்டுள்ள நடேசன் பொதுச் சொத்துக்களை முறையற்ற முறையில் உபயோகித்தமை,காணி கொள்வனவிற்காக அரசாங்க பணத்தை பெற்றமை, ஒழுங்காக வாக்குமூலம் வழங்காமை போன்ற குற்றச்சாட்டுகளின் பெயரில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழ் இவ்வழக்கு தொடரப்பட்டது. இங்கு திருக்குமார் நடேசன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி நளீன் லத்துவஹெட்டி ஆஜரானார்.
நீதிமன்றத்தில் வாதாடிய அவர் தனது கட்சிக்காரர் அரசாங்கத்திற்கு ஒழுங்கான முறையில் வரிகளை செலுத்தி வருகின்ற வியாபாரியென்றும் நேற்றைய தினமும் நிதி மோசடிப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டவுடன் தானாகவே சுயமாக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவிற்குச் சென்றதாகவும் குறிப்பிட்டார். எனவே இவரைப் பிணையில் விடுதலையாகிச் செல்ல அனுமதி வழங்குமாறும் நீதவானிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இவரை பிணையில் விடுதலை செய்ய பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.கே. சேரசிங்க எதிர்ப்பு தெரிவிக்காமையினால் நீதிமன்ற நீதவான் ருவன் பதிரண அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கியதோடு வெளிநாடு செல்வதாயின் நீதிமன்றத்திற்கு அறிவித்து விட்டுச் செல்லுமாறும் கட்டளையிட்டார்.
இவ்வழக்கு ஜனவரி 10ம் திகதி வரை பிற்போடப்பட்டது. மள்வானை காணி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உட்பட சிலரிடம் கடந்த காலத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்தக் காணியை நடேசன் வாங்கியிருந்ததோடு ஆட்சி மாற்றத்தோடு இவர் இதனை வேறு தரப்பினருக்/கு விற்றிருந்தார்.
இது குறித்து நிதி மோசடி பிரிவு விசாரணைகளை ஆரம்பித்ததையடுத்து குறித்த தரப்பினரும் அது தமது சொத்து அல்ல என நிராகரித்திருந்தனர். பெசில் ராஜபக்ஷ தரப்பினரும் இந்த காணியும் தனக்கு சொந்தம் அல்ல என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(தினகரன் 18 ஒக்டோபர் 2016)
பணத்தை பதுக்கி வைத்த 65 இலங்கையர்கள், விபரம் இதோ!
மஹிந்தவின் சகோதரி தமிழரை திருமணம் செய்தது ஏன்? உண்மை அம்பலம்!