பதுளை விபத்தில் இரு மாணவிகள் பலி- பாதுகாப்பு அமைச்சு
துன்ஹிந்த – பதுளை வீதியின் அம்பகசந்திய பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், 39வது பாடநெறியில் 36 மாணவர்கள் மற்றும் 3 விரிவுரையாளர்கள், ஆலோசகர், ஒரு சிரேஷ்ட இராணுவ உறுப்பினர் மற்றும் பேருந்தின் ஓட்டுநர் ஆகிய 42 பேர் பேருந்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், குருநாகல் மற்றும் நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளன. அவர்களின் இறுதிக் கிரியைகளை பல்கலைக்கழகத்தின் முழு அனுசரணையுடன் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், விபத்தில் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புறையில், நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், விபத்தின் காரணமாக பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு என்பதுதான் விபத்தின் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.