பாத்திரம் கழுவும் போது சுடப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் பலி
கடந்த 10ஆம் திகதி இரவு மதவாச்சி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் குடும்ப தகராற்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் மீது காயமடைந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த தாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
மஹதிவுல்வெவ, மதவாச்சியை வசிப்பிடமாகக் கொண்ட சேர்ந்த ஷிரோமி என்ற 44 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், மஹதிவுல்வெவ, மதவாச்சி பகுதியைச் சேர்ந்தவர்.
கடந்த 10ஆம் திகதி இரவு 7.45 மணியளவில் இம்முறை பொதுப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் தனது மகனுடன் பாத்திரம் கழுவுவதற்காக சமையல் அறைக்கு வந்த பெண், சமையல் அறைக்கு பின்னால் உள்ள புதர்களுக்குள் மறைந்திருந்த சந்தேகநபரால் சுடப்பட்டுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினாலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. காயமடைந்த பெண்ணை அயலவர்கள் மதவாச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். மேலதிக சிகிச்சைக்காக அவரை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த தாய் 16 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபர் கடந்த 10ஆம் திகதி இரவு மதவாச்சி பொலிஸ் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், கடந்த 12ஆம் திகதி அவர் வழங்கிய தகவலின் பிரகாரம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சந்தேக நபரை கடந்த 11 ஆம் திகதி மதவாச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்க மதவாச்சி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.