யுத்தத்தில் உயிரிழந்தவருக்கு எனது சொந்த செலவில் தூபி அமைக்க தயார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், உள்நாட்டுப் போரின்போது உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபி ஒன்றை அமைக்கத் தனது சொந்தச் செலவில் முன்வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கருத்து தெரிவிக்கையில், நீண்டகால உள்நாட்டுப் போர் காரணமாக மக்களின் உயிரிழப்பு அதிகமாகத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த யுத்தம் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு குறைவானதாலும் சம உரிமைகள் வழங்கப்படாததாலும் உருவாகி, பலரையும் பாதித்துள்ளது. குறிப்பாக, தமிழ் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகினர், மேலும் யுத்தத்தின் விளைவுகளை மறக்க முடியாத நிலை தொடர்கிறது.
இந்நிலையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை அமைப்பது அவசியமாகும் எனக் கூறினார். அரசாங்கம் அனுமதி வழங்கின், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பொதுவான நினைவுத்தூபியை தனது சொந்த செலவில் நிறுவத் தயார் எனவும், இது எதிர்கால அமைதியான சமூகத்தை உருவாக்க உதவும் எனவும் தெரிவித்தார்.