இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த அப்பாவி குழந்தைகள் எங்கே? சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம் காட்டமான தொனியில் கேள்வி
இறுதி போரின் போது படையினரிடம் சரணடைந்தவர்கள்கூட காணாமல் போயிருக்கிறார்கள். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் குடும்பமாக சரணடைந்தார்கள். அக்குடும்பங்களில் குழந்தைகளும் இருந்தார்கள். நான் அந்தக் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்தேன். அந்தக் குழந்தைகள் எங்கே? எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பிய சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட், வலிந்து காணாமலாக்குதல் என்பது மிக மோசமான, மிக கொடூரமான குற்றமும், உளவியல் ரீதியான சித்திரவதையுமாகும். இது இலங்கையின் நன்மதிப்பை கறைபடிய செய்திருக்கின்றது என சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி உண்மையோ, நீதியோ எதுவாக இருப்பினும், அதற்கான அழுத்தங்களையும், உதவிகளையும் மாத்திரமே சர்வதேச சமூகத்தினால் வழங்கமுடியும். இறுதித்தீர்வை இலங்கை மக்களுக்காக இலங்கையே வழங்கவேண்டும் எனவும், அதனை முன்னிறுத்திய பெரும் சக்தியாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையான தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார். இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் விரிவான சந்திப்புக்களையும் நடத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான விஜயம், இங்கு அவதானிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் என்பன தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஜெட்விங் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தெளிவுபடுத்திய முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையைப் பொறுத்தமட்டில் 2024 மிகமுக்கியமான ஆண்டாகும். மூன்று தசாப்தகாலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இவ்வருடத்துடன் 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். அதேபோன்று இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவிருப்பதாலும், இது முக்கியத்துவம் மிக்க ஆண்டாகிறது. எனவே 2024 ஐ ‘இலங்கையின் எதிர்காலம்’ என நான் அடையாளப்படுத்துவேன்.
அதேவேளை போர் முடிவடைந்து 15 வருடங்கள் பூர்த்தியாகும் ஆண்டு என்பதால், நீதியை நிலைநாட்டுவதில் சர்வதேச மன்னிப்புச்சபையின் வகிபாகத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் நான் இலங்கைக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தியிருந்தேன். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் பங்கேற்றேன். நீதியைக்கோரி தொடர் போராட்டங்களை நடத்திவரும் அம்மக்களின் உத்வேகம் மற்றும் மீண்டெழும் தன்மை ஆகியவற்றைக்கண்டு நான் மிகுந்த ஆச்சரியமடைகின்றேன்.
குழந்தைகள் எங்கே?
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடனான சந்திப்பின்போது, அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், மீறல்கள், அச்சுறுத்தல்கள் என்பன தொடர்பில் கேட்டறிந்தேன். 60,000 க்கும் மேற்பட்டோர் வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். ‘அவர்களுக்கு என்ன நடந்தது?’ என்ற கேள்வியை ஒட்டுமொத்த இலங்கையும் கேட்கவேண்டும். சட்டவிரோத படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் இருப்பினும், வலிந்து காணாமலாக்குதல் என்பது மிகமோசமான, மிகக்கொடூரமான குற்றமாகும். ஏனெனில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் சில வருடங்களோ அல்லது பல வருடங்களோ அல்லது பல தசாப்தங்களோ ஆறாத காயங்களுடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுவோர் உளவியல் ரீதியான சித்திரவதையாகும். அதுமாத்திரமன்றி இது இலங்கையின் நன்மதிப்பில் கறைபடியச் செய்திருக்கின்றது.
இறுதிக்கட்டப்போரின்போது படையினரிடம் சரணடைந்தவர்கள்கூட காணாமல்போயிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் குடும்பமாக சரணடைந்தார்கள். அக்குடும்பங்களில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளும் இருந்தார்கள். இருப்பினும் ஒட்டுமொத்த குடும்பங்களும் காணாமல்போயிருக்கின்றன. நான் அந்தக் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்தேன். அந்தக் குழந்தைகள் எங்கே? வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 15 வருடங்களாகத் தமது அன்புக்குரியவர்களைத் தேடிவருகின்றனர். 15 வருடங்கள் என்பது மிக நீண்டகாலமாகும். எனவே இவ்விவகாரம் தொடர்பில் தீர்வு காண்பதற்கு ஒட்டுமொத்த இலங்கையும் ஒன்றிணையவேண்டும்.
நினைவுகூரல் உரிமை
அடுத்ததாக மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்பட்டனர். போரில் வெற்றியோ, தோல்வியோ, எத்தரப்பினராயினும் அவர்கள் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும். கடந்த வாரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கோபமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் நினைவுகூரல் உரிமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் செயற்பட்டார். அதேபோன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டமைக்கு எதிராக ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமையையும் அவதானிக்கமுடிந்தது. இந்த ஒடுக்குமுறை முற்றிலும் அநாவசியமானதாகும். ஏனெனில் இவற்றால் வன்முறைகள் தூண்டப்படக்கூடும் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.
உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு
அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும் கடந்த 15 வருடகாலமாக இவ்வாறு உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் தோல்வியடைந்திருக்கின்றன. குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் தோல்வி அடைந்திருப்பதாகவும், தீர்வை வழங்குவதற்கான அரசியல் தன்முனைப்பு அவற்றிடம் இல்லை எனவும் நாம் சந்தித்த பலர் எம்மிடம் கூறினார்கள். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது கதையைக் கூறுவதற்கு எத்தனை தடவை இவ்வாறான ஆணைக்குழுக்களுக்குச் செல்லவேண்டும்?
எனவே இங்கு பாதிக்கப்பட்ட தரப்பினரின் நலனை முன்னிலைப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இயங்குகைக்கு ஏற்றவாறான சூழல் உருவாக்கப்படவேண்டும். நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் கடந்தகால அரசாங்கங்க்ள அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன. இருப்பினும் இது அரசியல் தலைமைத்துவத்தை மாத்திரம் சார்ந்தது அல்ல. மாறாக அரசியல், மதம், கலாசாரம் என சகல அங்கங்களினதும் தலைமைத்துவத் தோல்வியாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை போன்ற கட்டமைப்புக்களின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடியவகையில் அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். அத்தோடு கடந்த 15 வருடங்களில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு சம்பவங்களேனும் நம்பகத்தன்மைவாய்ந்த முறையில் நியாயபூர்வமாகத் தீர்க்கப்படவேண்டும். அவற்றில் கடற்படையினரால் 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை என்பன உள்ளடங்கலாம்.
நீதி மற்றும் பொறுப்புக்கூறல்
அடுத்ததாக கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன்கூடிய கலப்புப்பொறிமுறை வரவேற்கத்தக்கதாகும். இருப்பினும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாடு குறித்து ஆராயவேண்டும். அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கு அவசியமான ஒத்துழைப்பை இலங்கை வழங்கவேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் புதிய பிரேரணையொன்றைத் தயாரித்து முன்மொழிவதற்கும், இலங்கை அதன் சர்வதேச கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கும் அவசியமான போதிய அழுத்தங்களை வழங்குமாறு சர்வதேசத்திடம் கோரிவருகின்றோம்.
முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள்
உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அச்சமூகத்தை சார்ந்தோருக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகிப்பதை நிறுத்தவேண்டும்.
ஏனைய மீறல்களும், பரிந்துரைகளும்
அதேபோன்று மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும். அதனைப் பதிலீடு செய்வதற்கான முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமும் மோசமான சரத்துக்களையே உள்ளடக்கியிருக்கின்றது. எனவே அரசாங்கம் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் தாம் கொண்டிருக்கும் கடப்பாடுகளுக்கு அமைவாக இச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பயன்பாடு, அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்பு சட்டம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டமூலம் என்பன தொடர்பில் நாம் மிகுந்த அதிருப்தியடைகின்றோம்.
அத்தோடு அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான ஒடுக்குமுறைகள், அத்துமீறல்கள், கைதுகள், தன்னிச்சையான தடுத்துவைப்புக்கள் என்பன முற்றாக நிறுத்தப்படவேண்டு;ம். ஏற்கனவே அவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்ட போராட்டக்காரர்கள் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படவேண்டும். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு மதிப்பளிக்கப்படவேண்டும்.
அதுமாத்திரமன்றி 1951 முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும். பால்புதுமையின சமூகத்தவரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பு மிகமிகக்குறைவாகும். ஏனெனில் ஐ.நா பாதுகாப்புச்சபையில் 5 நாடுகள் ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக நோக்குமிடத்து, காஸாவில் போர்நிறுத்தத்தைக்கோரும் தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்காவும், உக்ரைன் போர்நிறுத்தத் தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தின. இருப்பினும் உரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கலாம். அது ஒப்பீட்டளவில் சிறந்த மாற்றுத்திட்டமாக அமையும். எதுஎவ்வாறிருப்பினும் உண்மையோ, நீதியோ இறுதித்தீர்வை சர்வதேசத்தினால் வழங்கமுடியாது. மாறாக அதற்கு அவசியமான நிதி, அரசியல் மற்றும் ஆலோசனைசார் உதவிகளை மாத்திரமே சர்வதேச சமூகத்தினால் வழங்கமுடியும். தீர்வு என்பது இலங்கை மக்களுக்காக இலங்கையால் வழங்கப்படவேண்டும் என்றார்.