உதவி இயக்குநரை மணந்த `பிக் பாஸ்’ விக்ரமன்!
பிக்பாஸ் சீசன் 6-ல் ரன்னராக வந்தவரும், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பவருமான விக்ரமன், சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் ப்ரீத்தி கரிகாலன் என்பவருடன் சென்னையில் திருமணம் முடிந்ததாக அறிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் மற்றும் பிரீத்தியின் குடும்பத்தைப் பற்றிய தகவல்களை பகிர்ந்த விக்ரமன், “ப்ரீத்தி, இயக்குநரும் நடிகருமான பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருக்கிறார். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பரஸ்பரம் அறிமுகமானதிலிருந்து, எங்கள் இருவருக்குமிடையில் நல்ல புரிதல் இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, “நாங்கள் சேர்ந்து வாழலாமென முடிவு செய்தபோது, வீட்டின் சம்மதம் முக்கியமென தெளிவாக இருந்தோம். எனவே, இருவருமே வீட்டில் பேசினோம். ப்ரீத்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனுக்கு பேத்தியாக இருக்கிறார். எங்கள் இரண்டு தரப்பிலும் பெரியவர்கள் சம்மதித்து, அவர்களின் ஆசிர்வாதத்துடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.”
விக்ரமன், “தாலி கட்ட வேண்டுமென ப்ரீத்தி விருப்பப்பட்டதால், அவர் விருப்பத்துக்காக பெரியவர்களால் சுயமரியாதை முறையில் தாலி எடுத்துக் கொண்டு, அதை நான் அவளின் கழுத்தில் கட்டினேன். பிறகு கிறிஸ்தவ முறைப்படி மோதிரமும் மாற்றினோம்” எனவும் தெரிவித்தார்.
இந்தக் கல்யாணத்தில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, கருபழனியப்பன், அவரது பிக்பாஸ் நண்பர்கள் ரச்சிதா மற்றும் ஷிவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மற்ற நண்பர்களுக்கான வரவேற்பு விவரங்களையும் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் விக்ரமன் கூறினார்.