உரிய நடைமுறைக்கு மாறாக மின் கட்டணத்தை அதிகரித்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு
(LBC Tamil) உரிய நடைமுறைக்கு மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இன்று முற்பகல் எல்லே குணவங்ச தேரரை சந்தித்தார்.
இதன்போது, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையிடம் இருந்து உறுதியான முன்மொழிவுகள் எவையும் கிடைக்கப் பெறவில்லை எனவும் ஊடகங்கள் மூலமே அறிந்ததாகவும் ஜனக்க ரத்நாயக்க, எல்லே குணவங்ச தேரரிடம் குறிப்பிட்டார்.
மின்சார சபையினால் முன்மொழிவு கிடைக்கப் பெற வேண்டும். அந்த முன்மொழிவு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்த தரவைப் பயன்படுத்தி மின் கட்டணத்தை திருத்த வேண்டும்.
இம்முறை அதிகாரம் அமைச்சரவைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து உத்தரவைப் பெற்றுக்கொள்ளும் முறைமை காணப்படுகின்றது. அமைச்சரவை அல்லது வேறு எங்கிருந்தாவது அத்தகைய யோசனை முன்வைக்கப்பட்டால், அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை .
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின், மின்சார கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் அல்லது மின்வெட்டிற்கு செல்ல நேரிடும் என அமைச்சர் கூறுகின்றார். இது நியாயமான வாதம் இல்லை
எனவும் ஜனக்க ரத்நாயக்க, எல்லே குணவங்ச தேரரிடம் கூறினார்.