உள்ளுராட்சி தேர்தல் ஏப்ரலில்!
2025ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்த அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்த அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முழுயைான இணக்கப்பாடுகளை எட்டிய பின்னர் இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட தயாராகி வருவதாகவும் தெரியவருகிறது.
என்றாலும், 2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த அரசாங்கத்துக்கு தீர்ப்பளித்திருந்தது.
அதன்படி,உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தன. என்றாலும், ஆட்சிமாற்றத்தை அடுத்து பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தப் பின்புலத்தில் மீண்டும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.