கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை கொல்லப்பட்டு 4 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது
கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்று நான்கு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சன் டி சில்வாவின் படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த ‘கொட்டிய’ எனப்படும் மலிந்து லக்மால்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா 2018 மே 24 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ‘கொட்டிய’ கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவுன்சிலரின் கொலையுடன் சந்தேக நபர் நேரடியாக தொடர்புபட்டவர் என்றும் அங்குலான சயுரு புர அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் தங்கியிருந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சின்ஹார அமல் சமிந்த சில்வா என்றழைக்கப்படும் ‘குடு அஞ்சு’ என்பவரின் நெருங்கிய உறவினரும், பாதாள உலகக் கும்பல் எல்லவல லியனகே தர்மசிறி என்றழைக்கப்படும் ‘பாட்டியா’வின் நெருங்கிய கூட்டாளியும் என்பதும் தெரியவந்துள்ளது.