கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியின் குறுக்கே அமைந்துள்ள தொடருந்துப் பாதையில் பாதுகாப்பான கடவையில்லாததால் நீண்ட நாட்களாக பெரும் அசெளகரியங்களை சந்தித்து வரும் அப்பகுதி மக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இது தொடர்பில் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இதுவரையில் நிரந்தர பாதுகாப்பான தொடருந்துப் பாதை எமக்கு அமைத்துத் தரப்படவில்லை. இது தொடர்பாக பல இடங்களில் தெரிவித்திருந்தும் இதுவரையில் எந்தவொரு முடிவுகளும் எட்டப்படவில்லை. இப்பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட கிராம மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தொழில் நிமித்தமாகவும், அன்றாட தேவைகளுக்காகவும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதே தொடருந்துக் கடவையில் கடந்த சில வருடங்களுக்கு முன் 16 மாடுகள் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்த சம்பவங்களும் உண்டு என்றனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து இன்றைய தினம் கிராம மக்களால் பிரதேச செயலரிடம் இது தொடர்பில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
தற்பொழுதுள்ள தற்காலிக தொடருந்துப் பாதையானது 2012 இல் கன்னிவெடி அகற்றும் பிரிவால் அமைக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.