சீரற்ற காலநிலையால் 55,000 பேர் பாதிப்பு!
நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக மண்சரிவு காரணமாக மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான ரயில் பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே, நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில் சேவைகள் இயங்கும்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று நள்ளிரவு வரை அமுலுக்கு வரும் வகையில் 09 மாவட்டங்களில் உள்ள பெருமளவிலான பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் அம்பர் எச்சரிக்கையும், காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக சியம்பலாண்டுவ மற்றும் லாகுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள ஹெடா ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும்.
மகாவலி நீர்ப்பிடிப்பின் சில பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக திம்புலாகலை, எச்சிலம்பட்டை, ஹிங்குராங்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, ஆகிய இடங்களில் அமைந்துள்ள மகாவலி ஆற்றைச் சூழவுள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும். மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமன்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த பிரதேச செயலகப் பிரிவுகள். இது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மாதுரு ஓயாவின் நீர்மட்டம் உயர்வினால் பதியத்தலாவ பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், நில்வலா ஆற்றின் நீர்மட்டம் உயர்வினால் தல்கஹகொட பிரதேசத்தில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நில்வலா ஆற்றின் காரணமாக பாணடுகம பகுதிக்கும், மகாவலி ஆற்றின் காரணமாக தல்தென பகுதிக்கும், யான்-ஓயா காரணமாக ஹொரவ்பத்தான பகுதிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15,670 குடும்பங்களைச் சேர்ந்த 55,416 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 06.00 மணி நிலவரப்படி 526 குடும்பங்களைச் சேர்ந்த 1696 பேர் 20 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளை பகுதியில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.