ஜனாதிபதியாக யார் வந்தாலும் எந்த பலனும் இல்லை

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நாங்கள் கடந்த 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வை பெற்றுத் தரவில்லை. எனவே இம்முறை இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் எமக்கு எந்தவித பலனும் இல்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (27) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையாட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) திகதி வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து இரு மாவட்டங்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

வடமகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களும் இணைந்து யாழ். மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களும் இணைந்து திருகோணமலை மாவட்டத்திலும் அன்றைய தினம் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். இதற்கு வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.

நாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீதியில் இருந்து போராடி வருகின்றோம். எனினும் எங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் இருந்தும் சரி சர்வதேச அரசாங்கத்திடம் இருந்தும் சரி எவ்வித சமிஞ்ஞைகளும் கிடைக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. நாங்கள் எவரையும் ஜனாதிபதியாக ஆதரிக்கவில்லை. எப்படியாக இருந்தாலும் ஜனாதிபதியாக சிங்கள ஆட்சியாளர்கள் வரப் போகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை. இதனாலேயே நாங்கள் சர்வதேசத்தை நம்பி நிற்கின்றோம்.

யார் ஜனாதிபதியாக வந்தாலும் எமக்கு கவலை இல்லை. எவரையும் நாங்கள் ஜனாதிபதியாக ஆதரிக்கவில்லை. எவராலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு எந்த பலனும் இல்லை. காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக முன்னெடுக்கும் போராட்டங்களில் ஒரு சில அரசியல் பிரதிநிதிகள் எமக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஏனையோர் எவ்வித ஆதரவும் வழங்கவில்லை. எனவே எவர் ஜனாதிபதியாக வந்தாலும் பரவாயில்லை. வருகின்றவர்கள் எமக்கு நீதியை பெற்றுத் தருவார்கள் என்றால் நாங்கள் அவர்களுடன் பேச முடியும் என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.