தமிழ் பொதுவேட்பாளர் என்பது பேரழிவாக அமையும் – யாழில் சஜித் தெரிவிப்பு

நேற்று (10) யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகை தந்து அங்கு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தலைமையிலான குருக்களை சந்தித்து கலந்துரையாடியபோது இதனை தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறிப்பாக அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அவருடன் சென்றவர்கள், வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களின் நிலை, நவாலி தேவாலய படுகொலை போன்ற விடயங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் யுத்த காலத்தில் தமிழர் பிரதேசத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள், இவற்றுடன் இணைந்த இனப்பிரச்சனைக்கான தீர்வு, தேர்தலுக்கான பொது வேட்பாளரை நியமித்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பின் போது, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தி, இதன் பலன்களை வடக்கு மக்களுக்கு வழங்கி இந்தப் பிரதேசங்களை மேலும் அபிவிருத்தி செய்து தருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பின்னர் குருமார் பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, அது தொடர்பில் பதிலளித்தார்.

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துதாக எதிர்க்கட்சி தலைவர் தம்மிடம் வாக்குறுதியளித்துள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில பிரமுகர்கள் குறிப்பிட்டு வருவது தொடர்பிலும், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் குருமார் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக பதிலளிக்கவில்லை.

“13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன். முதலில் மக்கள் மத்தியில் புரிந்துணர்வையும், இணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னரே சிக்கலான விவகாரங்களை கையாள வேண்டும்.“ என்றார்.

கடந்த காலங்களில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதனால் விரக்தியடைந்த தமிழ் மக்கள் தமது கோரிக்கையை வலியுறுத்த தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த முயற்சிக்கிறார்கள். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என குருமார் கேள்வியெழுப்பிய போது,

“ஜனநாயக நாடொன்றில் ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தலில் யாரும் போட்டியிடலாம். மக்கள் யாருக்கும் வாக்களிக்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் எனது தனிப்பட்ட கருத்து, பொதுவேட்பாளர் என்பது பொதுவன பேரழிவாக வரும்“ என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

இந்த விவகாரங்கள் எப்பொழுதே தீர்வு கண்டிருக்க வேண்டிய விடயங்கள் என்றும், தென்னாபிரிக்க மாதிரி உண்மையை கண்டறியும் குழுவை நிறுவி, உண்மையை வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு இயக்கனர் அருட்தந்தை மங்களறாஜா, அமலமரித் தியாகிகள் சபையின் மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக், யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் பருத்திதுறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற், புதுக்குடியிருப்பு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை, அருட்தந்தை ரவிச்சந்திரன், அருட்தந்தை எய்ன்சிலி றொசான் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.