தமிழ் மக்களிடம் ஜேவிபி முதலில் மன்னிப்பு கேட்கட்டும்?

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் ஊடாகத் தமிழ் மக்களைத் தங்களுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். தங்கள் மரபுவழித் தாயகமான இணைந்த வடக்கு-கிழக்கை நீதிமன்றப்படியேறிச் சட்ட ரீதியாகப் பிரித்தது ஜே.வி.பி என்பதைத் தமிழினம் ஒருபோதும் மறவாது.

இந்நிலையில், தமிழ் மக்களைத் தங்களுடன் இணையுமாறு கோருகின்ற ஜே.வி.பி வடக்கு-கிழக்கைப் பிரித்தமைக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்பையுமல்லவா கோர வேண்டும். அவ்வாறு கோருமா? என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்களைத் தங்களுடன் இணையுமாறு ஜே.வி.பியின் தலைவர் கோரிக்கை விடுத்திருப்பது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1944ஆம் ஆண்டில் கூட்டிய கொழும்புப் பிரஜைகளின் பொதுக்கூட்டத்தில் சுதந்திர இலங்கையின் அரசியல் அமைப்புக் கொண்டிருக்கவேண்டிய கோட்பாடுகள் குறித்து வலியுறுத்தியிருந்தது. அவற்றில், இனங்களுக்குச் சுயநிர்ணயம் தொடர்பாக பாரதீனப்படுத்த முடியாத உரிமை இருந்து வருகிறது என்பதை அங்கீகரிப்பதும், அவர்கள் விரும்பினால் அவர்களுக்கே உரித்தான சுயாதீன அரசுகளை உருவாக்கிக்கொள்ள முடியுமென்பதை அங்கீகரிப்பதும் ஒரு கோட்பாடாகும். ஆனால், கம்யூனிச சித்தாந்தத்தின் அடியொற்றிகளாகத் தங்களைக்கூறிக்கொள்ளும் ஜே.வி.பி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி இதுவரையில் தெரிவித்ததில்லை. தமிழ் மக்களைத் தங்களுடன் இணையக் கோருகின்ற ஜே.வி.பி அவர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதாகவுமல்லவா தெரிவிக்கவேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளுமா?

தமிழ் மக்கள் தங்களுடன் இணைந்தால் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் ஜே.வி.பியின் தலைவர் கூறிவருகிறார். முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்காகக் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் என்ன தேவைகளின் பொருட்டு நீண்டநெடிய தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்பது அவர் அறியாததல்ல. தேவைகளை நிறைவேற்றுவோம் என்று கூறும் ஜே.வி.பி தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தன்வசம் உள்ள தீர்வையுமல்லவா வெளிப்படுத்தியிருக்கவேண்டும். அவ்வாறு வெளிப்படுத்துமா? தமிழ் மக்களின் இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதில்களை ஜே.வி.பி வழங்காதவரை தமிழ்மக்களின் மனங்களை அதனால் ஒருபோதும் வெல்ல முடியாது. அதுவரை ஜே.வி.பியின் இந்த அழைப்புகள், அறிவுப்புகள் எல்லாம் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கவை வெல்ல வைப்பதற்காகத் தமிழ் வாக்குகளை நோக்கி வீசப்படும் தூண்டில்களாக மட்டுமே உணரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.