தரம் 10 மாணவிக்கு கடிதம் எழுதிய பாடசாலை அதிபர் கைது
ஹட்டன் கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபருக்கு எதிராக தமது குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் நேற்று (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையின் தரம் 10 மாணவியை தனிமையில் சந்திக்க அழைப்புக் கடிதம் எழுதிய அதிபரின் செயல், மாணவி மீது பாலியல் சீண்டலுக்காக இருக்கலாமெனும் சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது.
மாணவியால் எழுதப்பட்ட, அதிபரின் தகாத நடத்தை குறித்த முந்தைய கடிதமும் தற்போது வெளிவந்துள்ளது, இது பெற்றோர்களின் எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் போது, அட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
அந்த அதிபர், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அதிபரின் அரசியல் ஆதரவை மையமாக வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.