தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்!

2569 (2025) ஆம் ஆண்டு ஸ்ரீ பௌத்த வருடத்தினை முன்னிட்டு, தேசிய வெசாக் வாரம் இன்று (மே 10) ஆரம்பமாகி, மே 16ஆம் திகதி வரை நடைப்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, அரச வெசாக் மகோற்சவம் நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று முதல் ஆரம்பமாகிறது.
இலங்கை முழுவதற்குமான சாசன பாதுகாப்பு மன்றம், ஜனாதிபதி அலுவலகம், பௌத்த, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த விவகார திணைக்களம், மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து இந்த ஆண்டுக்கான அரச வெசாக் மகோற்சவத்தை ஏற்பாடு செய்துள்ளன.
“நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்” என்ற கருப்பொருளின் கீழ், இந்த ஆண்டு மகோற்சவம் மே 16ஆம் திகதி வரை நடைபெறும்.
அதேவேளை, நுவரெலியா மற்றும் பதுளை சாசன பாதுகாப்பு மன்றங்கள் இணைந்து நடத்திய தாய்லாந்து மகா சங்கத்தினரின் “சியம் இலங்கை தர்ம யாத்திரை” திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று நுவரெலியா நகரில் நிறைவடைகிறது.
இவ்வருட யாத்திரை பண்டாரவளையில் ஆரம்பிக்கப்பட்டு, நுவரெலியா வரை நடைபெற்றது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் சில விகாரை அபிவிருத்தி திட்டங்கள் முப்படைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கிடையில், வெசாக் வாரத்தையொட்டி, நாடு முழுவதிலுள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள், சூதாட்ட விடுதிகள், கெசினோ மண்டபங்கள், களியாட்ட மையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மே 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு, இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படும்.
மேலும், பல்பொருள் விற்பனை மையங்களில் இறைச்சி விற்பனை செய்யும் நடவடிக்கையும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சூதாட்ட விடுதிகள், கெசினோ மண்டபங்கள் மற்றும் களியாட்ட மையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.