தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம்
(LBC Tamil) 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் அரசியலமைப்பு பேரவைக்கு இன்னும் சிவில் செயற்பாட்டாளர்களை நியமிக்க முடியாமல் போயுள்ளது.
இதனால் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் செயற்பாடு தொடர்ந்தும் தாமதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல நியமனங்களை செய்வதற்கு அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரை பெறப்படுவது அவசியமாகும்.
பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதற்காக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், எஞ்சியுள்ள நியமனங்கள் தொடர்பில் இணக்கப்பாடற்ற நிலையை அவதானிக்க முடிகின்றது.
ஆளும் கட்சியின் பெரும்பான்மை இணக்கப்பாட்டின் அடிப்படையில் நியமிக்கப்படவுள்ள பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் காரியவசத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. எனினும், இந்த நியமனம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அரசியலமைப்பு பேரவைக்கான நியமனத்தை தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தியாக பயன்படுத்தினால், இந்த நியமனங்களுக்கு உடன்பட மாட்டோம் என்பதே இவர்களிள் நிலைப்பாடாக காணப்படுகின்றது.
அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பிலும் விவாத நிலமை ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், உத்தர லங்கா சபா கட்சியின் சார்பில் உதய கம்பன்பிலவை நியமிக்க வேண்டும் என கோரப்படுகிறது.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட வேண்டிய சிவில் செயற்பாட்டாளர்களின் நியமனத்திலும் தொடர்ந்தும் தாமதம் நிலவுகின்றது.
இதற்கான விண்ணப்பம் கோரும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் 112 விண்ணப்பங்கள் இதுவரையில் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் சந்தித்துக்கொண்டனர். எனினும், இந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது.
சகல உறுப்பினர்களும் நியமிக்கப்படும் வரை அரசியலமைப்பு பேரவை செயற்படுத்தப்படாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.
அரசியலமைப்பு பேரவையின் நியமனம் தாமதமானமையால், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு, பொது சேவைகள், தேசிய பொலிஸ் ஆணைக்குழு , கணக்காய்வு சேவை , மனித உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, நிதி கட்டுப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரை முக்கியமானதாகும்.
எனினும், இந்த புதிய நியமனங்கள் தாமதமானாலும், 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஆணைக்குழுக்கள் செயற்படுவதற்கான உரிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த திருத்தத்திற்கு அமைய, அரசியலமைப்பு பேரவையில் உள்ளடக்கப்பட்டுள்ள 41 இ பிரிவின் படி, தற்போதுள்ள உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை அந்த பதவியில் நீடிக்க முடியும்.