பாலஸ்தீன இனப்படுகொலையே இலங்கையிலும் நடந்தது – சுமந்திரன்

பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலைதான் இலங்கையில் தமிழர்களுக்கும் நேர்ந்தது. பலஸ்தீனத்திற்கு குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு என்ன செய்தது? இதுதான் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம். பாலஸ்தீனத்தின் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள். அந்த அக்கறை எங்கள் மக்கள் மீது இல்லையா? என்று கேட்கின்றேன்.

பலஸ்தீன விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச தலையீடு அவசியம் என்றும் கூறும் இலங்கை எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூறும் போது உள்ளக விவகாரம் என்று கூறுவது ஏன் ? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பலஸ்தீனத்தின் இன்றைய நிலைமை மிகவும் பாரதூரமானதுடன்,கவலைக்குரியது . இந்த நிலைமையை எவரும் அலட்சியப்படுத்தகூடாது.

இந்நிலையில் இந்த பாராளுமன்றத்தில் இருதலைப்பட்சமாக நடந்துகொள்பவர்களும் இருக்கின்றார்கள். அவர்களின் செயற்பாடு நயவஞ்சகமானது.

மனித உரிமைகள், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், இனப்படுகொலை உள்ளிட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பில் அவர்கள் பேசுகின்றனர். ஒரு நாட்டுக்குள் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிட்டு பலஸ்தீன நிலைமை குறித்து பேசுகின்றனர்.

பலஸ்தீனத்தில் அதிகளவான மக்கள் கொல்லப்படுகிறார்கள். இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்களும் பெண்களும் உள்ளனர்.

இந்த யுத்தத்தை பொறுத்தவரையில் ஹமாஸ் – மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலாகும். இலங்கையிலும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது. அதனை உள்விவகாரம் என்றும், சர்வதேச குற்றச் செயல் அல்ல என்றும் கூறியவர்கள் பலஸ்தீன சம்பவத்தை உள்விவகாரம் என்று கூறுவதில்லை.

மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த மக்களை நினைவு கூரும் வாரமாக இந்த வாரம் இருக்கின்றது.

போர் வலயத்திற்குள் 4 இலட்சம் மக்கள் சிக்கியிருந்தனர். அவர்கள் உண்ண உணவின்றி உப்பில்லா கஞ்சியையே அருந்தினார்கள். இதனை நினைவு கூரும் வகையில் அங்கு கஞ்சி பரிமாறப்படுவது வழக்கமாகும். இலங்கையில் யுத்தத்தில் ஏற்பட்ட மக்கள் இழப்புகளை நினைவுகூரும் நாளாகவே இதனை பார்க்கின்றோம்.

எமது மக்கள் இறுதி கட்ட யுத்தக் காலத்தில் கஞ்சியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போராடினார்கள். இதனை நினைவுகூர இடமளிக்காமை அரசாங்கத்தின் அவல நிலைமையையே எடுத்துக்காட்டுகினறது.

இந்த விடயத்தில் சம்பூரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட முறையை பார்த்தோம். குறித்த பெண் , ஆண் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கஞ்சியை அருந்தியதாகவே அவரை இழுத்துச் செல்கின்றனர். கஞ்சி விவகாரத்தில் பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவுகளையும் பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த நேரத்தில் பாலஸ்தீனத்தில் இறக்கும் மக்கள் தொடர்பில் பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இங்கே இறந்தவர்கள் தொடர்பில் நிலைப்பாடு என்ன என்று கேட்கின்றோம். இது இரட்டை நிலைப்பாடு இல்லையா? பலஸ்தீனத்தின் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள். அந்த அக்கறை எங்கள் மக்கள் மீது இல்லையா? என்று கேட்கின்றேன்.

பலஸ்தீன விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச தலையீடு அவசியம் என்றும் கூறும் நீங்கள் ஏன் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூறும் போது உள்ளக விவகாரம் என்று கூறுகின்றீர்கள்.

இது இரட்டை வேடத்தையே காட்டுகின்றது. யுத்தம் என்பது சுத்தமானதாக இருக்க முடியாது. ஒரு சுதந்திரமான விசாரணை அவசியமாகும். ஆனால் இங்கே உள்ளக விசாரணை தொடர்பில் கூறிக்கொண்டு ஒரு தரப்பு விசாரணையை முன்னெடுக்கின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிகின்றோம். ஆனால் அதே மனசாட்சியுடன் இங்கு 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில் உள்ளக பொறிமுறை என்று கூறிக்கொண்டு ஏன் இவ்வாறு நயவஞ்சகமாக செயற்படுகின்றீர்கள் என்று கேட்கின்றேன் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.