புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி வாழைச்சேனையில்
“புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம்” என்ற தலைப்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி இன்று (18) வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நடைபெற்றது. இந்நிகழ்வை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களமும் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
விழிப்புணர்வு பேரணி வாழைச்சேனை இந்து கல்லூரி முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, கல்குடா வீதி மற்றும் பிரதான வீதி வழியாகச் சென்று, வாழைச்சேனை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிறைவடைந்தது. அதன் பின்னர், வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயங்களை உணர்த்தும் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இந்த பேரணியில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுகாதார வைத்தியர்கள், அதிகாரிகள், பொது உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவில், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மார்பக புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.