பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை மீள பெறுமாறு ஐ.நா பாதுகாப்பு பேரவை தலிபான்களுக்கு வலியுறுத்தல்
(LBC Tamil)
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளை இலக்கு வைக்கும் தலிபான் அரசாங்கத்தின் கொள்கைகளை ஐ.நா பாதுகாப்பு பேரவை கண்டித்துள்ளது.
பெண்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தடை விதித்த தலிபான், அரச சார்பற்ற நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றவும் தடை விதித்துள்ளது.
அண்மையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மீள பெறப்பட வேண்டும் என ஐ.நா பொது செயலாளர் Antonio Guterres தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் முழுமையான, சமமான மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள திறக்குமாறும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தி கொள்கைகளை மீள பெறுமாறும் ஐ.நா பாதுகாப்பு பேரவை, தலிபான்களை வலியுறுத்தியுள்ளது.
பெண் மனிதாபிமான பணியாளர்கள் மீதான தடையானது, நாட்டில் மனிதாபிமான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மற்றும் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐ.நா மேலும் தெரிவித்துள்ளது.
அண்மையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ”நியாயப்படுத்த முடியாத மனித உரிமை மீறல்கள்” என ஐ.நா பொது செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.