பொதுத் தேர்தல் பிரசாரங்கள் 11 ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவு!
பொதுத் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர், தேர்தல் தொடர்பான அமைதிக்காலம் ஆரம்பமாகும். 11ஆம் திகதி, நள்ளிரவு 12 மணியிலிருந்து அமைதிக்காலம் தொடங்கும். இந்த காலத்தில் எந்தவித தேர்தல் பிரசாரங்களும் நடைபெறக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் குடும்பத்தினர் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிப்பது சட்டவிரோதமாக கருதப்படும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 7 (நேற்று) மற்றும் 8 (இன்று) ஆகிய தினங்களில் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னர் ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 4 ஆகிய நாட்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது. கடந்த நாட்களில் வாக்களிக்க முடியாத முப்படையினர் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு இந்நாளில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.