போஸ்டர் ஒட்டும் போது மின்சாரம் தாக்கி முல்லைத்தீவில் ஒருவர் பலி
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில், முத்துவிநாயகபுரம் பகுதியில் சுவரொட்டி ஒட்டும் போது மின்சாரம் தாக்கி 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், நேற்று (24) இரவு நடந்தது. முத்துவிநாயகபுரம் முத்தையன்கட்டு பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்ட முற்பட்ட அந்த நபர், காணி வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் மின்சாரம் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த மின்சார வேலி, காணி உரிமையாளரால் பொருத்தப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.