மருத்துவ உதவித் தொகையை அதிகரிக்க திட்டம்
(LBC Tamil) இந்த வருடம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவிக்காக 1500 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைத்த 11,000 விண்ணப்பங்களில் 10,360 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் பூர்த்தி செய்யப்படாத எஞ்சிய 642 விண்ணப்பங்கள் தொடர்பான பணப்பரிமாற்றங்கள் எதிர்வரும் சில வாரங்களில் பூர்த்தி செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ உதவிகளை வழங்கும்போது தற்போது வழங்கப்படும் உதவிகளை அதிகரிப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை வழங்க விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த குழுவின் பரிந்துரைகள் கிடைத்ததும்
மருத்துவ உதவித் தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.