மலையகத்தில் மூன்று பிள்ளைகளின் தாயார் கைது
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தி கொண்டு வந்த கஞ்சா வகையான போதைப்பொருளை என்.சி. என்ற ரசாயனத்துடன் கலந்து, அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மூன்று பிள்ளைகளின் தாயாரான 56 வயதுடைய பெண் ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவ கொட்டியாகல தோட்டத்தைச் சேர்ந்த இந்த சந்தேக நபர், சுகாதார அமைச்சினால் தடை செய்யப்பட்ட என்.சி. போதைப்பொருளை சிறிய பொதிகளாகத் தயாரித்து, இளைஞர்களிடம் விற்பனை செய்ததாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
பெண் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர் உடலில் மறைத்து வைத்திருந்த பல சிறிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 1.850 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.