மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை இந்திய மத்திய அரசுக்குத் தமிழ்நாடு முதல்வர் கடிதம்!
சென்னை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி, இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, 2024-ம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ராமேஸ்வரத்தில் இருந்து 23 மீனவர்கள், நவ.9ம் தேதி 2 இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டனர். மேலும், நவ.12 அன்று நாகப்பட்டினத்திலிருந்து 12 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களை கைது செய்வது வாழ்வாதாரம் மற்றும் குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், பெரிய அளவில் 2024-ம் ஆண்டில் இந்த கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும், தூதரக நடவடிக்கைகள் மூலம் உடனடியாகமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.