யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இறுதி ஊர்வலம்
ஈபிடிபியின் மூத்த உறுப்பினரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதயனின் இறுதிக் கிரியைகள் இன்று நெடுந்தீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் அஞ்சலி செய்தியும் வாசிக்கப்பட்டது.
அந்த அஞ்சலி செய்தியை அப்படியே கீழே தந்துள்ளோம்.
மலையின் நிமிர்வை ஒத்த எமது மனவுறுதியின் வழி நடந்தவர் தோழர் உதயன்!
எமது இலட்சியப்பயணம் மலையின் நிமிர்வை ஒத்த மனவுறுதி மிக்கது. அதை ஏற்று நடப்பவர்கள் சாமானியர்கள் அல்ல,.. எத்தடை வரினும் தாங்கி நடக்கும் சத்திய தீரர்களே.
தோழர் சில்வஸ்திரின் அலன்டீன் உதயன் அவர்களும் அத்தகைய சத்திய வழியின் நெடிய வரலாற்றை கொண்டவர்,..
அழிவு யுத்தமும் அவலப்பெருந்துயரும் சூழ்ந்து நிற்கையில்,..
ஆழப்பெருங்கடலில் தத்தளித்து நின்ற எமது மக்களை கரை சேர்க்கும் கப்பலாக
எமது கட்சி களமிறங்கிய வேளை தோழர் உதயனும் இணைந்து கொண்டவர்.
கேந்திர முக்கியத்துவம் அற்ற பிரதேசம் என எல்லோராலும் கைவிடப்பட்ட தீவக மண்ணையும் மக்களையும் நாம் நெஞ்சார நேசித்து களப்பணியாற்ற துணிந்த வேளை உறுதி கொண்டு உழைத்தவர் தோழர் உதயன்,..
எமது தேசிய நல்லிணக்க வழி நின்று எமது மக்களின் அன்றாட அவலங்களின் தீர்விற்காகவும்
அபிவிருத்திக்காகவும், அரசியலுரிமைக்காகவும் எமது கட்சியின் முத்திட்ட இலட்சியப்பணிகளை முன்னெடுத்தவர்,..
என்னுடன் சக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும்,. அதற்கு முன்னரும் பின்னருமான சூழலின் போதும்,.. எம்முடன் இணைந்து அவர் ஆற்றிய மக்கள் பணிகள் யாவும் ஊர் பார்த்த உண்மைகள்.
ஆர்ப்பரிப்பு இல்லாத அமைதியின் வடிவம் தோழர் உதயன்,. அவர் எளிமையானவர், சகல மக்களையும் ஆழ்மனதில் ஏந்தி நேசித்தவர்,.. எமது மக்களின் அழகார்ந்த உரிமை வாழ்வை எண்ணி எம்முடன் உழைத்தவர்,.. சமாதானம், சமவுரிமை, சமத்துவ நீதி,,,,
இவைகளுக்காக எமது உண்மை வழியின் மீதான அவதூறுகளை எதிர் கொண்டு எம்முடன் இணைந்து நடை முறைசாத்திய வழியில் உறுதியுடன் உழைத்தவர்,..
உண்மை நீதியை உலகம் ஒரு நாள் உணரும், இந்த நம்பிக்கையோடு கால மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர் தோழர் உதயன்.
தோழர் உதயன் எம்முடன் இணைந்து எதை சொன்னாரோ அதையே சகலரும் இன்று ஏற்றுள்ளனர். வரலாறு எம்மை விடுதலை செய்திருக்கும் இச்சூழலில் அதற்காக உழைத்த தோழர் உதயன் எம்மிடை இல்லாது போனது பெருந்துயர்..
இழப்பின் துயரின் வதை படும் சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன். பாசமிகு தோழன்
தோழர் சில்வஸ்திரின் அலன்டீன் உதயன் அவர்களுக்கு அஞ்சலி மரியாதை!