வாக்காளர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்டணமின்றி தபாலில் அனுப்பலாம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை கட்டணமின்றி வாக்காளர்களுக்கு தபாலில் அனுப்ப முடியுமென, பிரதித் தபால் மாஅதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

1981 ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு அமைய, எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இலங்கையில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் தனது வாக்காளர்களுக்கு அனுப்ப முடியும். உரிய முகவரியுடன் அதனை வழங்க வேண்டும். உச்சபட்ச நிறை 30 கிராம் ஆகும். தேர்தல் ஆவணம் என அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அனுப்புபவரின் முகவரியும் அதில் இருக்க வேண்டும். அது தமது தேர்தல் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதோடு, அதன் உள்ளடக்கங்களை தபால் திணைக்களத்தால் சரிபார்க்க முடியும்.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் அல்லது உதவி ஆணையாளரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த விடயங்களை பூர்த்தி செய்திருந்தால் இதனை மேற்கொள்ள முடியும். அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் இது தொடர்பில் குறிப்பிட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய தேர்தல் விஞ்ஞாபனங்களை தபாலுக்காக கொண்டு வந்து வழங்கினால், அவற்றைப் பகிர திணைக்களம் கடமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று தேர்தல் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்னர் செப்டம்பர் 11ஆம் திகதி வரை மட்டுமே அவற்றை ஏற்றுக்கொள்வோம் என்பதோடு, தேர்தல் தினத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நாம் இப்பணியை நிறுத்துவோம்.

இதனை இலவசமாக வழங்குமாறு தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், உண்மையில் அதற்கான விலையாக 2022 ​​ஓகஸ்ட் 15ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டு தற்போது அமுலில் உள்ள தபால் கட்டணமான, தலா ஒரு கடிதத்திற்கு 30 கிராமிற்கான கட்டணமான ரூ. 30 வினை தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான சுற்றுநிருபம் சகல மாகாணங்களதும் பிரதி தபால் மாஅதிபதிகளுக்கும், பிரதேச தபால் அத்தியட்சகர்கள். தபாலதிபர்கள் மற்றும் உப தபாலதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்கான வேட்புமனு கையளிக்கப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் நடைபெறும் தினத்துக்கு பத்து நாட்களுக்கு முன்னரான காலத்தினுள் விஞ்ஞாபனத்தை அனுப்ப முடியும். கட்டணமின்றி சாதாரண தபாலில் தமது பெயர் முத்திரையின் கீழ், ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் இவற்றை அனுப்ப முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.