12 வருடங்களின் பின்னர் காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கெடுப்பு
Colombo (News 1st) நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பொன்று 12 வருடங்களின் பின்னர் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2001ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கைக்கு அமைய நாட்டில் 5,000 இற்கும் அதிகமான காட்டு யானைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களங்களில் போதுமானளவு அதிகாரிகள் இன்மை காரணமாக இந்த கணக்கெடுப்பிற்காக ஆர்வம் மிக்க சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விவசாய நடவடிக்கைகளில் காட்டு யானைகள் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, நாட்டின் காட்டு யானைகளின் எண்ணிக்கையை வௌிப்படுத்துவது மாத்திரமின்றி, யானை – மனித மோதலை தவிர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது இந்த ஆய்வின் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்களை பயன்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.