13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த மூன்று கட்ட நடைமுறைகளை பின்பற்ற ​வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

(LBC Tamil) 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த மூன்று கட்ட நடைமுறைகளை பின்பற்ற ​வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அரசியலமைப்பிலுள்ள தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகளை நீக்காவிட்டால், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை  திறம்பட அமுல்படுத்துவது சாத்தியப்படாது என அவர் ஜனாதிபதியிடம் கையளித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்றதிகாரம், நிர்வாக அதிகாரங்கள் ஊடாக, மத்திய அரசாங்கம் பெற்றுக்கொண்ட அதிகாரங்களை மீளவும் மாகாண சபைகளிடம் கையளிப்பது முதற்கட்ட நடவடிக்கை என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்த சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட சட்டங்களுள் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடையூறாக காணப்படுகின்ற விடயங்களை ஆராய்ந்து, அவற்றை 13 ஆவது திருத்த சட்டத்துடன் பொருந்தும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வது இரண்டாவது கட்டம் எனவும் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

மூன்றாவது கட்ட நடவடிக்கையாக, 13 ஆவது திருத்தத்தின் சில விதிகளில் காணப்படும் தௌிவின்மையை நீக்கி, தௌிவான முறையில் அதிகாரங்களை வரையறை செய்து, ஒதுக்கீடுகளை மேற்கொண்டு சட்டமியற்றுதல், நிர்வாக, நீதித்துறை, நிதி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான வரையறைகளை உருவாக்குவதற்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளல் வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியிடம் கையளித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்திக்க முடியும் என்பதை தமது கட்சி தொடர்ச்சியாக கூறி வருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.