16 அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளோம்! ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அறிவிப்பு!

விடுதலை புலிகள் அமைப்பின் 16 உறுப்பினர்களை விடுதலை செய்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேணுவதை உறுதி செய்யும் வகையிலே இலங்கை அரசினால் இந்த விடையம் ஐரோப்பிய ஒன்றியதுக்கு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக, நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளிலான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போதுள்ள சட்டங்கள், கடந்த கால நடைமுறைகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தல் உட்பட 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஜூன் 25 ஆம் திகதி வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் முன்னுரிமையை மீளாய்வு செய்வதற்காகவும், ஒரு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகவும், அமைச்சரவை துணைக்குழுவுக்கு உதவும் முகமாக அமைச்சரவை துணைக்குழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்காகவும் ஜூன் 21ஆம் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நோக்கத்திற்காக, நீதித்துறை, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், பொது பாதுகாப்பு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய புலனாய்வு தலைமை அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிளுடன் ஜூன் 24ஆம் திகதி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற மற்றும் தண்டனை அனுபவித்த 16 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்களுக்கு, அரசியலமைப்பின் 34வது பிரிவின் படி ஜூன் 24ஆம் திகதி ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேலும் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், நீண்ட காலமாக நீதித்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நல்லிணக்க வழிமுறைகளில் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கையில், 1,230 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக, ஜூன் மாதத்தில் ரூபா. 79 மில்லியன் தொகையை இழப்பீட்டு அலுவலகத்திற்கு விடுவித்தமையை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. 3,389 மொத்த இழப்பீட்டு உரிமைக்கோரல்களில், 1,451 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக மேலதிகமாக ரூபா. 80 மில்லியன் தொகை ஜூன் 29ஆம் திகதி ஒதுக்கப்பட்டது.

வழக்கமான, நல்ல மற்றும் பன்முகத்தன்மையானதொரு உரையாடலை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் பேணி வருகின்றது. 27 சர்வதேச சாசனங்களுடன் நாட்டின் ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை மீளாய்வு செய்வதில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கும் இடையில் உள்ள ஆக்கபூர்வமான ஒத்துழைப்பும் இதில் உள்ளடங்கும்.

இது சம்பந்தமாக, 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு செயற்பாட்டில் இலங்கையின் மூன்றாவது சுழற்சி மீளாய்வு நடைபெற்று வருகின்றது. இந்த செயன்முறையின் ஒரு பகுதியாக, இராஜதந்திர இணைப்புக்களின் மூலமாக, ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவைக் கடைப்பிடித்து, தற்போதைய ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு சுழற்சியில் பின்தொடர்தல் கேள்விகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் விரிவான பதிலை வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளது. 26 வரிசை அமைச்சுக்கள் / இராஜாங்க அமைச்சுக்கள் / முகவர் நிலையங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு அமைச்சு பதிலளித்தது. மூன்றாம் சுழற்சிக்கான ஜி.எஸ்.பி. + கண்காணிப்புக் குழுவினர் 2021 செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் பரஸ்பரம் வசதியான திகதிகளில் இலங்கைக்கு வருகை தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வழக்கமான ஈடுபாட்டின் பிரகாரம், இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட திகதிகளில் ஆட்சி, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்ட விதி தொடர்பான செயற்குழுவைக் கூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு செய்வதற்காக 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 24வது அமர்வை ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசித்து கூட்டுவதற்கு வெளிநாட்டு அமைச்சு எதிர்பார்க்கின்றது.

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் நாட்டின் கணிசமான முன்னேற்றத்தை நிரூபிக்கும் அதே வேளையில், இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் நெருக்கமான மற்றும் நல்லுறவு உரையாடலைத் தொடரும்.

இலங்கையின் இணைந்த ஆடை சங்க மன்றம், இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் சந்தித்து, நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேணுவதை உறுதி செய்வதிலான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினர்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் புதுப்பிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட வணிக சபைகளுடனான சந்திப்புக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும் அவ்வாறு நீக்காது விடில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இழக்க வேண்டிவருமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.