மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய பாடசாலை மாணவி – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசலகூடத்தில் 18 வயது மாணவி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த பின்னர், ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த உயர்தர மாணவி ஒருவர், தனது கர்ப்பத்துவதை மறைத்து, வயிற்றுவலி எனக் கூறி, இன்று அதிகாலை 3.30 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியர்கள் சரியான முறையில் பரிசோதனை மேற்கொள்ளாததால், அவருக்கு வயிற்று வலிக்கான ஊசி மூலம் வலி நிவாரண மருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஜன்னல் வழியாக வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு
அதிகாலை 5 மணியளவில், குறித்த மாணவி மலசலகூடத்திற்குச் சென்று குழந்தையை பெற்றெடுத்த பிறகு, ஜன்னல் வழியாக வீசி விட்டதாக கூறப்படுகிறது.
குழந்தை, யன்னலின் கீழ் இருந்த பிளேற்றில் விழுந்து அழுகையிட, அங்கு பணியில் இருந்த தாதியர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர்.
தகவல் அறிந்து உடனடியாக மருத்துவர்களால் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மாணவிக்கும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம், தாயும் குழந்தையும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என உறுதிப்படுத்தினார்.
மேலும், மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.