48 மணித்தியாலங்களுக்கு அபாய எச்சரிக்கை!
நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக திம்புலாகல, கந்தளாய் கிண்ணியா, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில மற்றும் தமன்கடுவ வெலிகந்தை ஆகிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நீரினை வெளியேற்றுவதற்காக இன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
அத்துடன் மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.