5 இலட்சம் பேர் போதைக்கு அடிமையானோர் – பொலிஸ் மா அதிபர் அதிர்ச்சி தகவல்
நாட்டில் 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த தகவலின் படி நாட்டில் 44 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனும் உண்மை தெரியவருகிறது.
யுக்திய நடவடிக்கையின் ஆறு மாத கால முன்னேற்றம், 2ம் கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், பல்வேறு பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்தனர் என்று கூறப்படும் 5 ஆயிரத்து 979 பேரில் இதுவரை 5 ஆயிரத்து 449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 197.5 கோடி ரூபாயாகும்.
யுக்திய நடவடிக்கையில் போதைப் பொருள் தொடர்பாக இதுவரை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 448 பேர் மேலதிக விசாரணை களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.