கடந்த ஆண்டில் மாத்திரம் 678 பில்லியன்களை அச்சிட்ட இலங்கை அரசு!
இலங்கை அரசாங்கமானது கடந்த வருடத்தில்(2021) மாத்திரம் 678.33 பில்லியன் ரூபா பணத்தினை அச்சிட்டு இருப்பதாக தென் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வருட கடைசியான டிசம்பர் 31ம் திகதி இரவு இறுதி ஒரு மணி நேரத்தில் மாத்திரம் 6.65 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 30ம் திகதி அன்று 1.5 பில்லியன் டொலர் நாட்டுக்கு வந்ததாக கூறி எண் மந்திரம் ஒன்றை காட்டிய அரசாங்கம் டிசம்பர் 31ம் திகதியில் இவ்வாறு பணம் அச்சிடுவதால் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்படும்.
அரசாங்கம் கடந்த வருடத்தில் 678.33 பில்லியன் பணம் அச்சிட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டதில்லை.
இன்று பணவீக்கம் என்பது இலக்கத்தில் மாத்திரம் ஆகும். நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவைகள் பொருட்களின் விலை அதிரிக்கப்படுகிறது.
இந்நிலைமையை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதற்காக ஆட்சியில் உள்ள அரசாங்கத்திடம் எவ்விதமான வேலைத்திட்டமும் இல்லை.
தினமும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து செல்கின்றது. இதனை தீர்ப்பதற்கு அரசிடம் உள்ள ஒரேதீர்வு பணத்தினை அச்சிடுவதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.