ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரசின் சில நபர்கள்! காமினி ஆண்டகை சந்தேகம்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை ஒதுக்கி வைத்து விட்டு, விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பும் நபர்களை அரசாங்கம் பின் தொடர்ந்து வருவதாக வணக்கத்திற்குரிய கலாநிதி சிறில் காமினி ஆண்டகை (Fr. Cyril Gamini) கூறியுள்ளார்..
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் நேற்று மீண்டும் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை ஒதுக்கி வைத்து விட்டு கேள்வி எழுப்பும் நபர்களை பின் தொடர்வதன் ஊடாக விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சி மாத்திரமல்லாது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் உண்மையாக சூத்திரதாரிகளை பாதுகாக்க முயற்சிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களும் இருக்கின்றனரோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இச்சந்தேகம் எவருக்கும் எழக்கூடியது.
இப்படியான சந்தேகங்கள் ஏற்படுவதை பயமுறுத்தல்கள் மூலமோ, அச்சுறுத்தல்கள் மூலமோ நிறுத்திவிட முடியாது. அவ்வாறான சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க நியாயமான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினை நிறைவேற்றுவதற்காக கத்தோலிக்க திருச்சபை எடுக்கும் முயற்சிகளை எந்த வகையிலும் நிறுத்த போவதில்லை.
பயமுறுத்தல் அல்லது அச்சுறுத்தல்கள் மூலம் நீதியை தேடும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் என அரசாங்கத்தின் பிரதானிகள் நினைத்தால், அது மிகப் பெரிய கேலி.
முன்னாள் சட்டமா அதிபர் கூட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் மிகப் பெரிய சூழ்ச்சி இருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதை நம்ப நேரிடும் எனவும் சிறில் காமினி ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.