உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதியை அறிவியுங்கள் – பெப்ரல் அமைப்பு வலியுறுத்து
உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவை பெப்ரல் அமைப்பு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நிறைவடைந்துள்ளது. அரசாங்கம் அதனை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடித்துள்ளது.
இந்நிலையில் தற்போதைக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு திகதி குறித்து அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
நீதி மற்றும் நியாயமான தேர்தலுக்கான அமைப்பான பெப்ரல் அமைப்பு , அதன் பிரகாரம் தேர்தலுக்கான திகதியை அறிவிக்குமாறு கடிதம் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளது
21வது திருத்தச் சட்டம் மூலமாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான நியமனங்கள் நடைபெறாத நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கான சட்ட ரீதியான தடங்கல்கள் இல்லை என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அதேபோன்று தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் சாக்கில் அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஒத்திவைத்தால் தேர்தல் ஆணைக்குழுவே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது