புத்தகப்பை பரிசோதனையை, பாடசாலை குழுவிற்கு மாற்ற தீர்மானம்
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாட்டை பாடசாலை குழுவொன்றுக்கு மாற்ற கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த குழுவில் ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளடங்க வேண்டுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணுதல் மற்றும் அவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களை தௌிவுபடுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் பாடசாலை சூழலை மாணவர் நேய சூழலாகப் பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கலந்துரையாடப்பட்டுள்ளது.