தேர்தலை பிற்போடுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் அழுத்தம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய நிலைமைக்கு அமைய தேர்தலை பிற்போட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறை சட்டத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலை பிற்போட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது என நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை உள்ளது.
ஏனெனில் இரு தரப்பினரும் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் விடயத்தில் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் எனவும் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.