மின் கட்டண திருத்த யோசனையை புத்தாண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு
(LBC Tamil) 2023 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இதன் அடிப்படையில், இலங்கை மின்சார சபையினால் அறவீட்டு முறைமை தயாரிக்கப்பட்டு, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதனையடுத்து, குறித்த அறவீட்டு முறைமை நியாயமானதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பின்னர் தேவையேற்படின் பொதுமக்களின் கருத்து கோரப்படும்.
மானியங்கள் வழங்கப்பட்டால், அது தொடர்பில் திறைசேரியிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் அதனை கருத்திற்கொண்டே மின் கட்டண திருத்தத்திற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
இந்த முறைமையின் ஊடாக இலங்கை மின்சார சபை பாதுகாக்கப்படும் அதேவேளை, நுகர்வோருக்கு நியாயமான விலையில் மின்சாரம் கிடைக்கின்றமையும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவை கவனத்திற்கொள்ளாது மின்கட்டணம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது
டிசம்பர் மாதம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 2022 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தம் போதுமானதாக இல்லையென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
உத்தேச மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக, தற்போது 0 முதல் 30 அலகுகளுக்காக 08 ரூபாவாக இருந்த கட்டணம் 30 ரூபாவாகவும், 120 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
31 முதல் 60 அலகுகளுக்காக 10 ரூபாவாக இருந்த கட்டணத்தை 37 ரூபாவாகவும், 240 ரூபா நிலையான கட்டணத்தை 550 ரூபாவாகவும் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
91 முதல் 120 அலகு வரையான மற்றும் 121 முதல் 180 அலகு வரையான கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாதென்பதுடன், இதற்காக 960 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 1500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
181 அலகிற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 75 ரூபாவாக இருந்த அலகொன்றுக்கான கட்டணத்தில் மாற்றமில்லை என்பதுடன், 1500 ரூபா நிலையான கட்டணம் 2000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 0 முதல் 30 அலகு வரையில், அலகொன்றுக்கான கட்டணம் 8 ரூபாவிலிருந்து 30 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த மின் கட்டண திருத்தத்திற்கு பின்னர், வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கேள்வி, 10 வீதமும் தொழில் துறையில் 16 வீதமும் குறைவடைந்துள்ளது.
மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட்டால், நாட்டின் தொழில்துறைகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கைத்தொழில் துறையை சேர்ந்த பல அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.